இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நேற்றும் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நேற்று முன்தினம் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக, அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த பிரச்னையை விவாதிக்க மக்களவை, மாநிலங்களவையில் நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.
மக்களவையில் குறுகிய நேர விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், “இலங்கையில் தமிழர்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. அவர்கள் ஏராளமான கொடுமைகளை அனுபவித்துள்ளனர். மனித உரிமைகளை மீறியவர்களை அனைத்துலக சட்டத்துக்கு முன் கொண்டு வர வேண்டும். இலங்கை தமிழர் நலன் காக்க இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க பலமான இந்தியா முன்வர வேண்டும் என இந்திய தமிழர்கள் விரும்புகின்றனர்” என்றார். இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் தம்பித்துரை உட்பட பலர் பேசினர்.
மாநிலங்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், “இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து உலக நாடுகள் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா ஏன் கேட்கவில்லை? இலங்கை தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி துரோகம் செய்து விட்டது. ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர இடம் பிடிக்க விரும்பும் இந்தியா, இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த முதலில் வற்புறுத்த வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் மைத்ரேயன் உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர், இந்த விவாதத்துக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதில் அளித்தார். “தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்கும்படி இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தும். மற்ற மக்களுடன் தமிழர்களும் இணக்கமாக சேர்ந்து வாழ, நிரந்தர தீர்வு காணும்படி இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும். காணாமல் போன தமிழர்கள் பற்றிய பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அவையில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். இலங்கை தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டது பற்றி ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டது இன்னும் அதிகாரப்பூர்வ விவாதத்துக்கு வரவில்லை. அதற்காக, காத்திருக்கிறோம்’’ என்று கிருஷ்ணா கூறினார்.
இந்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து, தி.மு.க., அதி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.