பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்!

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி, அந்நாட்டு தலைமையமைச்சர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் பாகிஸ்தான் நிருபர் ஆமீர் அஹமது கான்.

“பாகிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைகளிடையே பல காலமாக நீறுபூத்த நெருப்பு போல இருந்து வந்த உறவுகளின் பிரதிபலிப்புதான் இந்த நடவடிக்கை”

தீவிரவாதிகளுக்கு எதிரான போரை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்த விஷயம் உட்பட பல விஷயங்களில் இராணுவத்துக்கும் சிவில் நிர்வாகத்துக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

அமெரிக்கவுடனான தொடர்புகள் போன்றவற்றில் கொள்கை முடிவுகளை யார் எடுப்பது குறித்தும் இருதரப்பினரிடையே ஒரு நெருடல் இருந்து வருகிறது எனவும் ஆமீர் அஹமது கான் சுட்டிக்காட்டுகிறார்.

எனவே பாதுகாப்புச் செயலர் நீக்கப்பட்டிருப்பது இப்படியான மோதல்களின் வெளிப்பாடுதான் எனவும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, பாதுகாப்புச் செயலரின் பணி நீக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. அது அந்நாட்டின் சிவில் நிர்வாகத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் நாட்டில் இராணுவப் புரட்சியின் மூலம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும் ஆமீர் அஹ்மது கான் கூறுகிறார்.