ஜொகூர் பாருவில் சைக்கிள் சகாசத்தில் ஈடுபட்ட 16 பதின்ம வயதினர் கைது

ஜொகூர் பாருவில் நேற்று “பாசிகல் லஜாக்” (மாற்றியமைக்கப்பட்ட சைக்கிள்) நடவடிக்கைகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் பதினாறு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டனர்.

நகர மையத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும், 16 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஜொகூர் பாரு செலாட்டன் துணை காவல்துறைத் தலைவர் அஸ்ருல் ஹிஷாம் ஷாபி தெரிவித்தார்.

பின்னர், இளைஞர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டதாக அஸ்ருல் கூறினார்.

இவர்கள்  மீண்டும் குற்றத்தைச் செய்தால், குழந்தைகள் சட்டம் 2001 இன் கீழ் அலட்சியத்திற்காக சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று பெற்றோருக்கு எச்சரிக்கப்பட்டது.

“அவர்களுடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட அனைத்து இளைஞர்களும் விடுவிக்கப்பட்டு, அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

“பொதுமக்கள், குறிப்பாக வயது குறைந்த குழந்தைகளின் பெற்றோர்கள், அவர்களின் செயல்பாடுகளை எப்போதும் கண்காணிக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம், இதனால் அவர்கள் தங்களை அல்லது பிற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நடத்தைகளில் ஈடுபடக்கூடாது,” என்று அஸ்ருல் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

தடுப்பான் இல்லாமல், பெல் இல்லாமல், பின்புற சிவப்பு விளக்கு இல்லாமல் மிதிவண்டி ஓட்டுவது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக இளைஞர்களுக்கு 16 அபாரதங்கள் வழங்கப்பட்டது.

குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 33(1)(a) இன் கீழ், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை மேற்பார்வையிடத் தவறியதில் அலட்சியமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டால், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடும்.

 

 

-fmt