ரஷிட்: PSC யோசனைகளை ‘ஒரு வாரத்தில்’ அமலாக்கி விடலாம்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) யோசனைகள் வெறும் நடைமுறை மாற்றங்களே. அவற்றை ஒரு வாரத்தில் அமலாக்கி விடலாம் என்று தேர்தல் ஆணையத்தின் (இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறுகிறார்.

“பிஎஸ்சி தெரிவித்துள்ள யோசனைகளை தேர்தல் விதிமுறைகளை மாற்றினால் போதும். அதனை ஒரு வாரத்தில் செய்து விடலாம். அதில் கையெழுத்திட வேண்டியதுதான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை. அவ்வளவுதான்,” என கோத்தா பாருவில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் கருத்தரங்கு ஒன்றில் அவர் கூறினார்.

நடப்புச் சீர்திருத்தங்கள் பிரச்னையின் “வாலை” மட்டுமே தொட்டுள்ளன.”தலையைப் புறக்கணித்துள்ளன.”

“நீங்கள் காரின் புகை போக்கியையும் கதவையும் மாற்றலாம். ஆனால் அதன் எந்திரம் இன்னும் பழையதுதான்,” என்றார் ரஷிட்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு தெரிவித்த பல கோரிக்கைகள் பிஎஸ்சி பரிந்துரைகளில் இடம் பெறவில்லை என்பது ரஷிட்-டிடம் சுட்டிக் காட்டப்பட்டது.

அது குறித்துக் கருத்துரைத்த ரஷிட் அவை அடிப்படை மாற்றங்கள் சம்பந்தப்பட்டவை. அதனை அமலாக்குவதற்குக் காலம் பிடிக்கும் என்றார் அவர்.

தாம் இசி தலைவராக இருந்த போது நான் பல மாற்றங்களைப் பரிந்துரை செய்தேன். ஆனால் அடிப்படை மாற்றங்களைத் தொட முடியவில்லை. காரணம் அரசாங்கத்துடனான என் உறவுகளைப் பாதுகாக்க வேண்டியிருந்தது என்றும் ரஷிட் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதில் மற்ற அரசாங்க அமைப்புக்கள் சம்பந்தப்படுவதையும் அவர் குறை கூறினார்.

இசி-க்கு தேர்தலை நடத்த முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ரஷிட் விரும்புகிறார். அப்போதுதான் தேர்தல் தூய்மையானதாகவும் நேர்மையானதாகவும் கருதப்படும் என்றார் அவர்.

அரசியல் கட்சிகள் பதிவு இசி-யின் கீழ் வர வேண்டும் எனவும் அவர் யோசனை கூறினார்.

“அந்த அதிகாரம் இசி-க்கு இருந்தால் பக்காத்தான் ராக்யாட் வெகு காலத்துக்கு முன்பே பதிவாகி இருக்கும்,” என்றும் ரஷிட் குறிப்பிட்டார்.

தேர்தல்களின் போது ஊடகங்கள் பயன்படுத்தப்படும் முறையிலும் மாற்றங்கள் தேவை என அவர் கருதுகிறார்.

“அனைத்துலகத் தரங்கள் அடிப்படையில் பார்த்தால் பிரச்சாரத்துக்கு பொது ஊடகங்கள் பயன்படுத்தப்படவே கூடாது. அப்படி நீங்கள் செய்தால் சமமான வாய்ப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும்.”

நடப்பு பிஎஸ்சி பணிகள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் முடிவுக்கு வந்து விடும் என்பதால் அடிப்படை தேர்தல் சீர்திருத்தங்களை மேற்பார்வையிட நிபுணர்களைக் கொண்ட நிரந்தர அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் ரஷிட் விரும்புகிறார்.