சிலாயாங் இல் உரிமம் பெறாத சிறுவர் இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் தொடர்பாக 4 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தாமான் சிலாயாங் பெர்மாத்தாவில் (Taman Selayang Permata) உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பல சிறுவர்கள் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, அந்த இல்லத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (New Straits Times) செய்தியின்படி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த அத்துமீறல்கள், சமீபத்தில் 18 வயதை எட்டிய முன்னாள் குடியிருப்பாளர்கள் இருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் அந்த இல்லத்தை நடத்தி வந்த 31 வயது நபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரும் அடங்குவர். இந்த இல்லம் சமூக நலத்துறையால் (JKM) நடத்தப்படாமல், ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

சிலாங்கூர் மாநில ‘பெர்துபுஹான் கெபாங்கித்தான் தீகா தாங்கான்’ (Pertubuhan Kebangkitan Tiga Tangan) அமைப்பின் தலைவர் எஸ். மாரன் கூறுகையில், “இவை ஏதோ ஒருமுறை நடந்த தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல; நீண்டகாலமாகத் திட்டமிட்டு, தொடர்ச்சியாக நடந்து வந்த அநீதிகள்” என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தனது தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) புகார் அளித்ததாகவும், பின்னர் அன்றைய தினம் மாலை பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற போர்வையில் அந்த இல்லத்திற்குச் சென்றதாகவும் மாரன் தெரிவித்தார்.

சந்தேக நபரினுடைய கைப்பேசியில் சித்திரவதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டதையடுத்து, நிலைமை மோசமடைந்தது.

மாரன் இது குறித்துக் கூறுகையில்:

எங்கள் உறுப்பினர்கள் மெதுவாக அங்குள்ள குடியிருப்பாளர்களிடம் விசாரணை செய்யத் தொடங்கினர். சில குழந்தைகள் உண்மைகளைக் கூறத் தொடங்கினர். அவர்களில் பலர் சந்தேகத்திற்குரிய நபர்களை அடையாளம் காட்டினர்.

“பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் நாங்கள் கண்டறிந்த விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, இதில் இனி எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு உண்மையான சம்பவம். இந்த குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

NST செய்தியின்படி, இன்றுவரை அந்த இல்லத்திற்கு எதிராக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs), முன்னாள் குடியிருப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களால் குறைந்தது 10 காவல்துறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது என்றும், அவற்றில் சில காயங்கள் அண்மையில் ஏற்பட்டவை என்று நம்பப்படுவதாகவும் மாறன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களான அந்தப் பாதிக்கப்பட்டவர்கள், சிலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“கைது நடவடிக்கை மற்றும் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து, எங்களது உறுப்பினர்கள் அந்த இல்லத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்தக் குழந்தைகளில் சிலர் மிகுந்த மன உளைச்சலுடன் (trauma) வாழ்வதை நாங்கள் கவனித்தோம்,” என்று மாறன் கூறினார்.

புக்கிட் அமனின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவு (D11) முதன்மை உதவி இயக்குநர் சிதி கம்சியா ஹசன், இந்தக் கைது நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதோடு, இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் என்.எஸ்.டி (NST) செய்தி வெளியிட்டுள்ளது.