ஜூன் மாதக் கூட்டத்தொடருக்கு முன்பாக புதிய எதிர்க்கட்சித் தலைவரை அறிவிப்போம் – ஹாடி

ஜூன் மாதம் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக புதிய எதிர்க்கட்சித் தலைவர் பெயரிடப்படுவார் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் விரிவான ஆலோசனைகளை நடத்திய பிறகு அது இறுதி செய்யப்படும் என்று மாராங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூன் மாதம் வரை நடைபெறாது என்பதால், முடிவெடுக்கப் போதிய கால அவகாசம் இருப்பதாகவும், தற்போது உட்கட்சி விவகாரங்கள் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் ஒரு கட்சியை மட்டும் சார்ந்ததல்ல, அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியது என்பதால், இது குறித்து அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசிக்கப்பட வேண்டும்.

சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்,” என்று அவர் கூறினார்.

வேட்பாளர் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும், என்று அவர் இன்று இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறார்.

 

-fmt