ஜனநாயகம் மலர தேர்தலே சிறந்தது: பான் கி மூன்

தேர்தல் மூலம் தான் ஒருநாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என ஐ.நா. பொதுச்செயலர் கூறினார். எகிப்து, துனீசியா, லிபியா, போன்று நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. தற்போது ஏமன், சிரியாவில் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் மேற்கு ஆசியாவின் ஐ.நா.வுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சார்பில், ஜனநாயக முறை மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் லெபானானின் தலைநகர் பெய்ரூட் நகரில் இரு நாள் மாநாடு நடந்தது.

இதில் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் கலந்து கொண்டு‌ பேசியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் தற்போது ஜனநாயகத்தின் தேவையினை உணர்ந்து கொண்டு வருகின்றனர். அதே போன்று அரேபு நாடுகள் சிலவற்றிலும் ஜனநாயகத்தின் வேர் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

இந்நாடுகளில் சீர்திருத்தம் தேவை என்பது உணரப்பட்டுள்ளது. இத்தகைய நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா. மேற்கொள்ள தயாராக உள்ளது. தேர்தல் மூலம் தான் எந்த நாட்டிலும் ஜனநாயகத்தினை நிலைநாட்ட முடியும்.

மத்திய கிழக்கு நாடுகளில் எழுந்துள்ள பிரச்னையை தீர்க்க, தேர்தலை நடத்தாமல் அங்கு ஜனநாயகத்தை அவ்வளவு எளிதில் அடையமுடியாது. அரபு நாடுகளிலும், ஜனநாயகத்தை மலர கொள்கை அளவில் முடிவு எடுக்கும் நாடுகளில் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.