யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான துறைகளில் புலிகளின் அனைத்துலக கட்டமைப்பு முதலீடு செய்து அதன்மூலம் யாழ்ப்பாண வர்த்தகத்துறையில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருப்பதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தக நடவடிக்கை மூலம் பெறப்படும் இலாபம் புலிகளின் நிதிக் கட்டமைப்பைச் சென்றடைவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான வர்த்தகர் ஒருவருக்கு புலிகள் ஆதரவு வழங்கி வருவதாகவும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் இந்த வர்த்தகருக்கு 16 பார ஊர்திகளை புலிகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலி ஆதரவு தமிழர்கள் இதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளனர் எனவும் இந்தத் தகவல்களை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணத்திற்கு இடையிலான போக்குவரத்தை நடத்தும் பேருந்துகளின் உரிமையாளர்கள், பிரபல விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக முயற்சியாளர்களுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவளித்து வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.