தாலிபன் தரப்பினர் ஆப்கானிய அரசைச் சேர்ந்தவர்களை அடுத்த சில வாரங்களில் சவுதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பும் முதற்தடவையாக நேரடியாக சந்திக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்கான் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் அது முக்கிய கட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது குறித்து தாலிபன் தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்துக்களும் வெளியாகவில்லை. ஹமீட் கர்சாயின் அரசை ஒரு சட்டவிரோத அரசாகவே கருதிவந்த தாலிபன்கள் முன்னர் இப்படியான அழைப்புகளை புறந்தள்ளியே வந்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆப்கானியத் தலைமையிலேயே நடைபெற வேண்டும் என்று கர்சாய் கூறுகிறார்.
ஆனால் அண்மையக் காலங்களில் தாலிபான்களுடன் பேசுவதற்கு அமெரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் மீதே கூடுதல் கவனம் காட்டப்பட்டுவருகின்றது.
இதேவேளை தாலிபான்கள் தமது தரப்பில் தொடர்பாடல் அலுவலகமொன்றை கட்டாரில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.