நெடுந்தீவில் மனிதப் புதைகுழி; 8 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நெடுந்தீவில் மனித புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள உதவி மாவட்ட ஆணையர் பணிமனைக்கு அருகில் புதிய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கட்டுமான வேலைக்கென நிலத்தை தோண்டியபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து இந்த மனித புதைகுழி பற்றிய விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது பற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா, யாழ்ப்பாணம் பதில் சட்ட மருத்து அதிகாரி சின்னையா சிவரூபன் ஆகியோர் முன்னிலையில் காவல்துறையினர் அந்த இடத்தை தோண்டியுள்ளனர்.

அங்கு 8 மண்டையோடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. நீதிபதியின் உத்தரவையடுத்து, இந்த மனித எலும்புக்கூடுகள் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.

10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்துக்கு உரியதாக கருதப்படுகின்ற இந்தப் புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டையோடுகளில் ஒன்று இளம் பெண் ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

நில மட்டத்தில் இருந்து ஒரு அடி தொடக்கம் ஒன்றரை அடி ஆழத்தில் இந்த மனித மண்டையோடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் பதில் சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

இந்த எலும்புகளுடன் ஆடைகளோ அல்லது வேறு எந்தத் தடையப் பொருட்களுமோ காணப்படவில்லை என தெரிவித்த டாக்டர் சிவரூபன், இந்தப் புதைகுழி எவ்வளவு காலம் பழையது என்பதைக் கண்டறிவதற்காக இங்கிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டையோடுகள் மற்றும் புதைகுழி மண்ணின் மாதிரிகள் என்பன அரச இரசாயன பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்ததன் பின்பே இந்தப் புதைகுழி பற்றிய மேலதிக விவரங்கள் தெரியவரும் என்றும் டாக்டர் சிவரூபன் தெரிவித்தார்.