வன்னி மருத்துவர்கள் தவறான அறிக்கை கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்

வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை கூறவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள இராஜாங்க துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது

வன்னிப்போரின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். அவற்றை குறித்த மருத்துவர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர். எனினும் போர் முடிந்த பின்னர் அந்த மருத்துவர்கள் இலங்கை படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் வன்னிப்போரின் போது அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக குறித்த மருத்துவர்கள் கூறுவதாக அரசாங்கம் தெரிவித்து வந்தது. இதனை அவர்கள் செய்தியாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பர் என்று அரசாங்கம் தெரிவித்தது.

இதன்படி போரின் போது வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களான சத்தியமூர்த்தி, வரதராஜ், மற்றும் சண்முகராஜா ஆகியோர் தாம் போரின் போது வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்று குறிப்பிட்டனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு தாம் கூறியதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதனை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரியான ஆர் மூர், அமெரிக்க இராஜாங்க துறைக்கு ‘கேபிள்’ செய்தி மூலம் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறித்த மருத்துவர்கள் வரவேற்றிருந்தமையையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

எனினும் அந்த மருத்துவர்கள், இலங்கை அரசாங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்டு பொய் கூறியதை அடுத்தே அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தொடர்ந்தும் தமது பணிகளில் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தூதரகம் இராஜாங்கத் துறைக்கு கேபிள் மூலம் அறிவித்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.