மரண தண்டனையை ரத்துச் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து பாரத தேசத்தின் அன்பையும் மனிதநேயப் பண்பையும் பெருமைப்படுத்துமாறு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழக முதல்வர் ஊடாக இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கருணை மனுவில் ஈழத்தமிழர்கள் சார்பாக இந்த உருக்கமான கோரிக்கையை அவர் விடுத்தார்.

அந்தக் கருணை மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“பாரத தேசத்தின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் எமது உறவுகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் மீதான தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அறிந்து ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம்.”

“வரலாற்றினால் இணைவு பெற்ற இருதேசங்களாகவும் இரத்த பந்த உறவினர்களாகவும் நாங்கள் உங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இலங்கையில் ஏற்பட்ட பகைமையும் அதனால் எழுந்த ஈழத்தமிழரின் துயரவாழ்வையும் மூன்றாந்த தரத் தந்திரோபாயங்கள் ஊடாகவே இலங்கை அரசு அணுகி வருகின்றது. இந்தப் பகை முரணும் அதன் பரிணாமங்களும் சில சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழர் மீதான தவறான புரிதல்களையும் அணுகு முறைகளையும் பிற அரசுகள் கைக்கொள்ள வழிகோலி உள்ளது. இதற்கு இலங்கை அரசு ஊக்கியாக இருந்துள்ளது. ஆனால் இந்திய தேசத்தின் உண்மையான நேச சக்தியாக எப்போதும் ஈழத்தமிழர்களே இருந்து வருகின்றார்கள்.”

“ராஜீவ்காந்தி கொலையின் போதும் அந்தக் கொலையால் இந்திய மக்கள் கொண்டிருக்கின்ற நெடுந்துயரிலும் அனுதாபம் மிகுந்த பங்காளர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கின்றனர். அன்பு, காருண்யம், மன்னித்தல் எனும் உயர் விழுமியங்களை ஏற்றுப் போதிக்கின்ற பாரத அரசும் பாரத மக்களும் தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கின்ற எமது உறவுகளுக்கு இரக்கம் காட்டி உலக அளவில் காலாவதியாகி வரும் தண்டனை முறைகளுக்கு மாற்றீடு ஒன்றைச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.”

“சிங்களப் பெருந்தேசிய அடக்கு முறைகளாலும் போரால் ஏற்பட்ட வலிகளையும் ஆற்ற முடியாது அந்தரித்து நிற்கும் சமூகம் சார்பில் எங்கள் சகோதரர்கள் மீது கருணை காட்டுமாறு கோருகின்றோம். தூக்குத் தண்டனை எனும் பாவச்செயல் ஒன்றை நிறைவேற்றி ஈழத்தமிழர்களின் இதயங்களில் மாறா பெருங்காயத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று அன்புரிமையோடு கேட்டுகிறோம். பழிக்குப் பழிதீர்க்கா பக்குவம் மிகுந்த இந்திய மண்ணையே காண விரும்புகின்றோம்” என்று அந்த கருணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.