கிருஷ்ணாவுக்கு விருந்தளித்து விட்டுக் கன்னத்தில் அறைந்துள்ளார் மகிந்தா!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விவகாரத்தில் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டுச் சதி செய்கின்றன. இனப்பிரச்னைக்கு 13-வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருந்த குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே, இன்று தான் அப்படிக் கூறவே இல்லை என்றும் இனப்பிரச்னை தீர்வுக்கு இலங்கை நாடாளுமன்றமே தீர்மானம் எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

மகிந்தா ராஜபக்சேவின் இந்தக் கருத்தும் செயற்பாடும் எஸ். எம். கிருஷ்ணாவுக்கு விருந்தளித்து விட்டு கன்னத்தில் அறைந்ததுக்கு சமனானதாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“மகிந்தா ராஜபக்சேவின் அரசாங்கம், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வைத் வழங்கும் என்றும், 13-வது அரசியல் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் என்றும்; ஏன் அதற்கு ஒருபடி மேலே சென்று அதிகாரங்களை வழங்கும் என்றும் தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, தனது இலங்கைப் பயணம் குறித்துத் தெரிவிக்கையில் கூறினார்.

ஆனால், ராஜபக்சே, இது குறித்து பத்திரிகைகளிடம் உரையாடும் போது தான் அவ்வாறு கூறவே இல்லை என்றும் இலங்கை  நாடாளுமன்றம் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது இந்திய அமைச்சருக்கு விருந்தளித்து விட்டு கன்னத்தில் அறைந்துள்ள செயலாகும்.

இலங்கை அரசு 13-வது அரசியல் திருத்தத்தை நிறைவேற்றும் என்று தமிழக மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் தொடர்ந்தும் இந்திய அரசு ஏமாற்றி வருகின்றது. 2011-ஆம் ஆண்டு மே மாதத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் டில்லியில் வெளியிட்ட அறிக்கையில் 13-வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று ஒரு பொய்யை வெளியிட்டார்கள். 13-வது திருத்தம் என்பதையே இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் உண்மையான அதிகாரப் பகிர்வு கிடையாது.

இதேபோல் 1987-ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, ஒப்பந்தம் கையெழுத்தான பத்து நாட்களுக்குள் அன்றைய இலங்கை குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜயவர்த்தனா மறுத்தது மட்டும் அன்றி, அதனை எதிர்த்துப் பிரசாரம் செய்வேன் என்றும் கூறினார். அப்பொழுதும் இந்திய அரசு ஊமையாக இருந்தது.

பின்னர் 2007 ஆம் ஆண்டில் கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் இணைப்பு கூடாது என்று இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டு, வடக்கு கிழக்கு இணைப்பு கிடையாது என்று தீர்ப்பளித்தது. இந்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. வாய் திறக்கவும் இல்லை.

தொடர்ந்தும் இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை அரசு நடத்தும் கபட நாடகத்தையும் தாய்த் தமிழகத்தில் உள்ளோரும் இலங்கைத் தமிழர்களும் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இனியும் இந்திய அரசின் ஏமாற்று வேலைகள் ஒருபோதும் எடுபடாது என அவ்வறிக்கையில் வைகோ தெரிவித்தார்.

TAGS: