தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வரை ஒரு மர்மமான மனிதர்தான்.
இவரைப் பற்றி வெளியுலகத்துக்கு தெரிய வந்திருக்காத விடயங்கள் ஏராளம். போராட்டத்தை இவருடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இன்று உயிருடன் உள்ளார்கள்.
பிரபாகரனைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கின்ற வாய்ப்புக்கள் அதிகம்.
பிரபாகரனுடன் சேர்ந்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவர்தான் கணேசன் ஐயர். 17 வயது முதல் பிரபாகரனை கவனித்தவர். பிரபாகரன் உருவாக்கிய முதலாவது அமைப்பில் மத்திய குழுவில் இருந்தவர். ஐயர் என்கிற பெயரால் பலருக்கும் அறியப்படுபவர்.
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற நூலை இவர் எழுதி உள்ளார். இனியொரு வெளியீடாக இந்நூல் மலர்ந்து உள்ளது. 32 அத்தியாயங்கள் கொண்டது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி பிரிட்டனில் வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. இதில் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த மிகவும் அறியப்படாத புது விடயங்கள் ஏராளம் இடம்பெற்றுள்ளன.
“எங்கோ தெருக்கோடியில் உள்ளூரிலேயே அறியப்படாத மூலையில் கால்படாத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும் உலகின் மிகப் பெரிய கொரில்லா இயக்கமாகவும் பேசப்படுகின்ற சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில் இருந்தே கட்டி அமைக்கப்பட்டது எனலாம்.
பல தடவை தனித்து யாருமற்ற அனாதை ஆகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனி மரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும் உறங்க இடமுமின்றி தெருத்தெருவாக அலைந்திருக்கிறார். இவை எல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி விடவில்லை.
இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்துக்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்” இவ்வாறு பிரபாகரன் குறித்து ஓரிடத்தில் எழுதி இருக்கின்றார் ஐயர்.