சிறார்களை காணவில்லை; பெற்றோர் கண்ணீருடன் தவிப்பு

இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதி போரின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐநாவின் சிறார்கள் நல அமைப்பாகிய ‘யுனிசஃப்’ நிறுவனம் மற்றும் பல்வேறு அரச அமைப்புக்களின் உதவியோடு காணாமல்போன சிறார்களில் இதுவரை சுமார் 600 பேர் வரையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தபோது சுமார் 3 இலட்சம் மக்கள் வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்தபோது இறுதிச் சண்டைகள் நடைபெற்ற இடத்திற்கு வெளியில் இருந்த பெற்றோர்கள் பலர் காணாமல் போயிருந்த தமது பிள்ளைகளைத் தவிப்போடு தேடிக்கொண்டிருந்தார்கள்.

இவர்களில் பலர் கண்ணீரோடு வந்து தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு தன்னிடம் கோரியதாக வவுனியா அரசாங்க ஆணையர் திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸ் தெரிவித்தார்.