சிரியாவில் நடந்துவரும் வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு தலைவர் பஷர் அல் அஸ்ஸத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ கூறியுள்ளார்.
அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சு நடத்த தயார் என்றும் சிரியாவுக்கான விரிவுபடுத்தப்பட்ட அரபு லீக் கண்காணிப்புப் பணியில் தான் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அசாத், லாவ்ரோவிடம் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
அசாத்துக்கு எதிரானவர்கள் மீதான வன்செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அரபு லீக்கின் ஆதரவுடன் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதற்காக சீனாவுடன் ரஷ்யாவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சிரியாவுக்கான பெரிய ஆயுத வழங்குநராக உள்ள ரஷ்யா அங்கு இன்னும் கடற்படைத் தளம் ஒன்றையும் வைத்திருக்கிறது.
இதேவேளை, சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்குப் பதிலடியாக சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு மன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆறு நாடுகள் தமது தூதுவர்களை சிரியாவிலிருந்து மீள அழைத்துக்கொண்டுள்ளன.
அதேவேளை, தமது மண்ணிலிருந்து சிரியாவின் தூதுவர்களையும் இந்த நாடுகள் வெளியேற்றுகின்றன.
சிரியா அமைதி முயற்சிகளில் ஈடுபடுமென்ற வாக்குறுதியை மீறிவிட்டதாகக்கூறி அங்கு அரபு லீக் கண்காணிப்பில் இருந்த தமது பிரதிநிதிகளையும் இந்த வளைகுடா கூட்டுறவு மன்ற நாடுகள் ஏற்கனவே மீள அழைத்திருந்தன.
கடந்த சில நாட்களில் தமது தூதுவர்களை சிரியாவிலிருந்து மீளஅழைத்துக்கொண்ட பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி உள்ளி்ட்ட நாடுகளின் வழியில் இப்போது வளைகுடா கூட்டுறவு நாடுகள், மன்ற நாடுகள் சிலவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சிரியாவிலுள்ள தனது தூதரகத்தை மூடிவிட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஹொம்ஸ் நகரின் மீது சிரிய இராணுவத்தினர் புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளனர்.
அங்கு ரஷ்ய நாட்டுத் தயாரிப்பு யுத்தத் தாங்கிகளை பெரும் எண்ணிக்கையில் அவதானிக்க முடிவதாக நேரில் கண்டவர்களை மேற்கொள்காட்டி தகவல்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதது.