பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய தேசத்துக்கு மட்டுமன்றி இலங்கை உட்பட தெற்காசிய பிரதேசத்துக்கே சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி அடிகளின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நினைவுப் பேருரை நிகழ்வொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நினைவுப் பேருரை நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்க தலைவர் கலாநிதி அ. செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி செ. இராசதுரை, சிவஸ்ரீ சிவயோகச்செல்வன் சாம்பசிவம் குருக்கள் ஆகியோர் தலைமை அதிதியாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் தமிழர்களின் பங்கு குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் காந்தீயம் தொடர்பிலும் வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
இதன்போது கனடாவில் இருந்து வெளிவரும் ஆதவன் வார இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல எழுத்தாளர்கள், கல்விமான்கள் கலந்துகொண்டதுடன் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.