ஹாண்டுரஸ் சிறையில் பயங்கர தீ விபத்து; 300 பேர் பலி

ஹாண்டுரஸ் நாட்டின் சிறை ஒன்றில் செவ்வாய்கிழமை (14.2.2012) ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் முன்நூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் தலைநகர் தெகுசிகல்பாவுக்கு வடக்கேயுள்ள கோமயாகுவா நகரில் 1850 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்த நாநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விபத்தை பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்து தப்பி ஒடிவிட்டனர்.

பல சிறைவாசிகள் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைகளிலேயே எரிந்து சாம்பலானதாகவும் மற்றவர்கள் மூச்சுத் திணறி இறந்ததாகவும் தீ அணைப்புத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து நடந்த சிறை
சிறையில் இருந்த பலரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பலர் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக சிறைவாசிகளின் உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

பலர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இரு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாக சிறைச்சாலை அதிகாரி டேனியல் ஓர்லென்னா தெரிவித்துள்ளார்.
உறவுகளைத் தேடி கதறும் உள்ளங்கள்
அதாவது ஒரு சிறைக் கைதி படுக்கையை தீயிட்டு கொளுத்தியதாக ஒரு தகவலும், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது என்று மற்றுமொரு தகவலும் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தீ விபத்தை அடுத்து சிறையில் கலவரம் ஏற்பட்டதாக அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்த விசாரணைகள் தொடங்கியுள்ளன.

எனினும் அந்தச் சிறையில் இருந்த 356 பேரின் கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை.

ஹாண்டுரஸ் நாட்டில் கொலைகள் செய்துவிட்டு சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதும், அங்கு சிறைக் கூடங்களில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.