இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இம்மூவரின் தூக்குத்தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, மூவர் சார்பில் சந்திரசேகர் என்பவர் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள், நாகப்பன் மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட் மூவர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத்மலானி, மோகத் சவுத்ரி மற்றும் காலின் கோன்சாலின் ஆகியோர் வாதாடினர்.
இந்த வழக்கில், ராம் ஜெத்மலானி தமது வாதத்தில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு 11 ஆண்டுகள் 4 மாதம் கழித்து நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில், இரண்டாண்டு காலம் தாமதித்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தாமதம் தவறானது. இதுகுறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஒரு கைதியை அவரது அறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்துச்சென்று அவரை தூக்கிலிட 30 விநாடிகள் கூட ஆகாது. அப்படி இருக்கும் போது 11 ஆண்டு காலம் அவர்களை காக்க வைத்தது என்ன நியாயம்? எனவே இந்த விசயத்தில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.
விசாரணையின் முடிவில் இம்மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூவரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ரத்து செய்துள்ளன. இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி விட்டு அதன் முடிவு தெரியாமல் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வோமா அல்லது சாவோமா என தெரியாமல் ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச்சிறையில் தவித்த தவிப்பு, மரண தண்டனையை விடக்கொடுமையானது. எனவே 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால் எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
மூவரின் தூக்கை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம்
ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.