114வது மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூடம் பிஎன் மாநிலத் தலைவர்களுக்கு மட்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசான் அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
“அரசாங்க ஊழியர் என்ற முறையில் தலைமைச் செயலாளர், அரசியல் கட்சிகளுக்கான கூட்டம் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. அவர் தொழில் ரீதியாக நடந்து கொண்டிருக்க வேண்டும்,” என இன்று காலித் விடுத்த அறிக்கை கூறியது.
அந்தக் கூட்டம் பிஎன் -னுக்கும் மட்டுமே உரியது என நஜிப் “வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளதாக” அவர் சாடினார். பக்காத்தான் அரசுகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுமாறு அரசாங்க ஊழியர்களுக்கு ஊக்கமூட்டும் அபாயகரமான முன்னுதாரணத்தையும் அது வழங்கியுள்ளது.”
“அந்தக் கூட்டம் பாரபட்சமானது. அதனால் அதில் கலந்து கொள்வதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என முகமட் சிடிக் பிரதமரிடம் துணிச்சலாகச் சொல்லியிருக்க வேண்டும்.” என்றார் காலித்.
அந்தக் கூட்டத்துக்கான நிதி எங்கிருந்து பெறப்பட்டது ?
அந்தக் கூட்டத்துக்கு யார் நிதி உதவி செய்தார்கள் ? கூட்டரசு அரசாங்கமா அல்லது பிஎன் -னா ? அந்தக் கூட்டத்துக்குக் கூட்டரசு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டிருந்தால் அது வழக்கமான நடைமுறை என்றும் அதில் தவறு ஒன்றுமில்லை என்றும் பிரதமர் அகங்காரமாக எப்படிக் கூற முடியும் ?” என்றும் சிலாங்கூர் மந்திரி புசார் வினவினார்.
பிரதமர் உண்மையிலேயே மலேசியாவின் பொருளாதார உருமாற்றத் திட்டங்களை அமலாக்குவதில் ஈடுபாடு கொண்டிருந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு சிறந்த முன்னுதாரணத்தை வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.