ஈரானில் இஸ்லாம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தினை தழுவிக்கொண்டதுடன் போதகராகவும் மாறிய நபரொருவருக்கு அந்நாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யூசெப் நதார்கனி (34) என்ற குறித்த நபர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார்.
இஸ்லாம் மதத்தினை அவமதித்தார் மற்றும் கிறிஸ்தவ மதத்தினை கைவிட மறுத்தார் போன்ற காரணங்களுக்காகவே அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பானது உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
தனது நடவடிக்கைக்கு வருந்தும்படி அந்நாட்டின் கிலான் மாகாண நீதிமன்றம் கோரியிருந்த போதும் யூசெப் அதனை மறுத்துவிட்டதாக அவரது சட்டக் குழு தெரிவித்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான யூசெப் கடந்த 2009-ஆம் ஆண்டு அவரது சொந்த நகரான ராஸ்டில் தனது கிறிஸ்தவ தேவாலயத்தினை பதிவு செய்ய முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டார்.
ஈரான் தன்மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத்தடைகளுக்கு எதிர்ப்பைக் காட்டவே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
ஈரானில் சுமார் 100,000 வரையான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவதாகவும் இவர்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவிக்கின்றன.
யூசெப் மீது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டார் என மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் அக் குற்றச்சாட்டு மத அவமதிப்பு வழக்குகளாக மாற்றப்பட்டதாகவும் பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு சட்டத்தின் சர்ச்சைக்குரிய 6.255 ஆம் பிரிவின் படி ஒருவரின் பெற்றோர், அவர்/ அவள் கருத்தரிக்கும் வேளையில் முஸ்லிமாக இருந்து அவர்/ அவள் வேறு மதத்திற்கு மாறுவாராக இருந்தால் அது அங்கு மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ் அடிப்படையிலேயே யூசெப்பிற்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இவருக்கான தண்டனை எந்நேரத்திலும் வழங்கப்படலாம். ஈரானில் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கப்படுமாயின் அது எந்நேரத்திலும் நிறைவேற்றப்படலாம்.
அங்கு வழங்கப்படுகின்ற மரணதண்டனைகள் சில சமயங்களில் உடனே நிறைவேற்றப்படும் அதேவேளை பல ஆண்டுகள் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
இத்தண்டனை நிறைவேற்றப்பட்டால் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு கிறிஸ்தவர் அங்கு தூக்கிலிடப்பட்ட முதல் சம்பவமாக இது அமையும்.
அங்கு கடைசியாக 1990-ஆம் ஆண்டு கிறிஸ்தவ போதகரான ஹொசீன் சூட்மென்டிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்நாட்டில் பல கிறிஸ்தவர்கள் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6 புரட்டஸ்தாந்து போதகர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.