சிரியாவுக்கு மேலும் பல கடுமையான தடைகள்

சிரியா மீது நேற்று ஐரோப்பிய யூனியன் அமைப்பு மேலும் பல கடுமையான தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் மாகாணம் மற்றும் ஹோம்ஸ் நகர் மீது இராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

சிரியா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேற்று கூடிய ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில், சிரியா மீது மேலும் பல தடைகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அசாத்தின் நெருங்கிய உதவியாளர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை, சிரியாவில் இருந்து புறப்படும் சரக்கு விமானங்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழையத் தடை, தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களின் வர்த்தகத்திற்கு கடுமையான விதிகள் ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் சர்மின், மாரத் அல் நுமான், பின்னிஷ் ஆகிய சிறு நகரங்களில், இராணுவம் நேற்று கடும் தாக்குதல் நடத்தியது. இப்பகுதிகள் அனைத்தும் எதிர்த் தரப்பின் வசம் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரியா இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

சிரியாவின் எதிர்த் தரப்புக்கு எவ்விதத்தில் ஆதரவளிப்பது என்பது குறித்து, சிரியா எதிர்ப்பு நாடுகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. சில நாடுகள், எதிர்த் தரப்புக்கு ஆயுதம் அளித்து உதவலாம் எனத் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை வரவேற்பதாக, அல்- குவைதாவும், ஹமாசும் கூட அறிவித்துள்ளன.

ஆனால், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறுகையில், இந்த முடிவு, அல்- குவைதாவிற்கும், ஹமாசுக்கும் தான் சாதகமாக முடியும் என எச்சரித்துள்ளார்.

ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், ரஷ்யாவும், சீனாவும் சிரியா தீர்மானத்திற்கு எதிராக தடையாணையை (வீட்டோ) பயன்படுத்தியதால், சிரியாவில் மக்கள் கொல்லப்படுவதாக கிளின்டன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ஒன்று, “ஈராக்கில் தினம் தினம் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒன்றே போதும், அமெரிக்காவின் பிற நாடுகள் பற்றிய கொள்கை மீது நாம் சந்தேகப்படுவதற்கு” எனத் தெரிவித்துள்ளது.