இலங்கைக்கு எதிராக வாக்களியுங்கள்; ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் :

கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி, தங்களிடம் நேரில் அளித்த மனுவிலும், அதே மாதம் 25-ம் தேதி அனுப்பிய கடிதத்திலும், “இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா., சபையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர் குற்றவாளிகள் என்று அறிவிக்கச் செய்ய வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீள்குடியேறச் செய்து, மறுவாழ்வு கிடைக்கச் செய்து, மரியாதையுடனும், சிங்களர்களுக்கு இணையாக சம உரிமையுடனும் நடத்தப்படாவிட்டால், மற்ற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.

தமிழக சட்டசபை தீர்மானத்தின் மீது, சாதகமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகக் கருதி வந்த நிலையில், அமெரிக்கா ஆதரவுடன் ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்படும் என்று, இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரே கூறியுள்ளார். எனவே, தங்களிடம் அளித்த மனு மற்றும் எழுதிய கடிதத்தில் உள்ள விவரங்களை, மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஐ.நா., சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் வரும் போது, அதை இந்தியா ஆதரிக்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

TAGS: