சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி

சிரியாவில் நிலைமை மோசமாகி வருவது குறித்து, கவலை தெரிவித்துள்ள ஐ.நா., பாதுகாப்புக் மன்றம், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகள் சென்றடைய உதவும் படி சிரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சிரியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. எதிர்த் தரப்பான சிரிய விடுதலை ராணுவம் வசம் இருந்த, பாபா அமர் பகுதியை சிரிய ராணுவம் நேற்று மீட்டது. பாபா அமரில் இருந்து தாங்கள் பின்வாங்கியுள்ளதாக எதிர்த் தரப்பு அறிவித்துள்ளது.

பாபா அமரில் சண்டைக்கு முன், ஒரு லட்சம் பேர் இருந்ததாகவும் தற்போது அங்குள்ள, 4,000 பேரும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்த் தரப்பு தெரிவித்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிரிய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின், உணவு மற்றும் மருத்துவ உதவிப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள், நேற்று பாபா அமருக்குள் சென்றன. பாபா அமரில் தற்போது மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், அங்கு காயம்பட்டோரின் நிலைமை, மேலும் கவலைக்கிடமாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா., மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட சிரியாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்திற்கு, 37 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.ரஷ்யா, சீனா, கியூபா நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஈக்வடார் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் வாக்களிக்கவில்லை.

இதுகுறித்து, நேற்று பேட்டியளித்த ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், “சிரியாவுடன், ரஷ்யா தனிப்பட்ட முறையில் எவ்வித உறவும் வைத்துக் கொள்ளவில்லை. சிரிய பிரச்னையை மேற்குலக நாடுகள் தான் மேலும் மேலும் வளர்த்து விடுகின்றன’ எனக் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், சிரியா நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, சிரிய நிலவரம் குறித்து கவலை தெரிவித்த மன்றம், மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனடியாக கிடைப்பதற்கு சிரியா போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.