போர்க்குற்றம்: இலங்கையை மன்னித்துவிடக் கூடாது என்கிறார் ஐ.நா நிபுணர் குழு தலைவர்

இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார்.

இலங்கை குறித்து ஐ.நா நிபுணர் அறிக்கையை தயாரித்த தருஸ்மன் அமெரிக்காவின் ‘த நியுயோர்க் டைம்’ பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ள சில விடயங்கள்:

இலங்கை அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து உண்மையான, நீதியான தீர்வை எட்டுவதுடன், உரிய வகையில் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமை மன்ற உறுப்பு நாடுகள் தமது ஆதரவை நல்குவதற்கான வழிவகைகள் தொடர்பாக தற்போது ஆராயப்படுகிறது.

இந்த விடயத்தில் மனித உரிமைகள் மன்றமானது தமது நகர்வை மேற்கொள்வதற்கு அமெரிக்கா முன்னின்று செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் மன்றமானது 2009-ம் ஆண்டிலிருந்து தான் கொண்டுள்ள குழப்பநிலையை தீர்ப்பதற்கான உகந்த நேரம் இதுவாகும்.

இவ்வாறானதொரு கோரிக்கை மட்டும் போதுமானதல்ல. நாம் எமது அறிக்கையில் பரிந்துரைத்ததன் படி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை மனித உரிமைகள் மன்றமானது உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற மனித மீறல்கள் தொடர்பில் வெற்றி பெற்றுக் கொண்டவர் என்பதை விடுத்து, உண்மையான பொறுப்புக் கூறல் என்பதைக் கண்டறிய வேண்டியது இன்றியமையாததாகும். தென்னாபிரிக்கா, சியாராலியோன், ஆஜென்ரினா போன்ற நாடுகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு  இலங்கை விடயமும் கையாளப்பட வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் அனைத்துலக சமூகமானது போதியளவு ஆர்வத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தொடர்ந்தும் இவ்வாறானதொரு சூழலை கவனத்திற் கொள்ளாது, அசட்டையாக இருந்து விட முடியாது என்பதுடன் இந்த விவகாரத்தை மன்னித்து விடவும் முடியாது.

இலங்கை அரசாங்கமானது தனது எல்லா மக்களுக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் தனது மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தனது கடப்பாட்டை அனைத்துலக சமூகமானது தட்டிக்கழிக்காது, அதனை நிறைவேற்ற வேண்டிய காலம் இதுவாகும் என தஸ்ருமன் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: