ஈராக்கில் 26 காவல்துறையினர் சுட்டுக்கொலை

ஈராக்கில் இராணுவ சீருடையில் வந்த அல்கொய்தா பயங்கரவாதிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்பட 26 காவல்துறையினரை சரமாரியாக சுட்டுக்கொன்றனர்.

ஈராக்கின் மேற்கு மாகாணமான ஹாதிதாவில் பாதுகாப்புபடையினரின் சோதனைச்சாவடிகள் மற்றும் உயரதிகாரிகளின் வீடுகள் உள்ளன. கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈராக்கின் இராணுவ சீருடையில் வாகனம் ஒன்றில் வந்தனர்.

அங்கு பாதுகாப்புப் ப‌ணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கி அல்-கொய்தாவினர் சரமாரியாக சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு உயரதிகாரிகள் உள்பட 26 காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து ஹாதிதா காவல்துறை செய்தி தொடர்பாளர் தாரிக் ‌சையத் ஹல்தான் கூறுகையி்ல், இராணுவ சீருடையில் அல்கொய்தாவினர் வந்தனர். அவர்கள் காவல்துறை உயரதிகாரியிடம் கைது ஆணை வாங்க வந்ததாக கூறினர். இதில் சந்தேகம் ஏற்படவே பாதுகாப்பு காவல்துறையினர் அவர்களை மேலும் விசாரணை செய்த போதுதான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது என்றார்.