தமிழ்நாட்டின் திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் துப்பு துலக்கப் போய் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், “தலை தப்பியது மம்தா புண்ணியம்” என மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு திரும்பினர்.
கடந்த பிப்ரவரி, 20-ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், 10 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள, 38 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அன்று இரவு 10.30 மணிக்கு மேல், மறுநாள் காலை 5.30 மணிக்கு முன், இந்தக் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என, போலீசார் சந்தேகித்தனர்.
கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களின் விசாரணையில், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என துப்பு கிடைத்தது.
டி.எஸ்.பி., ராஜாராமன் தலைமையிலான, 20 பேர் கொண்ட குழுவினர் கடந்த வாரம் மேற்கு வங்கம் சென்றனர். பராக்கார் என்ற இடத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. உள்ளூர் போலீசாரின் தயவில், ‘இன்பார்மர்’கள் இரண்டு பேரைப் பிடித்து கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை தமிழக போலீசார் நெருங்கினர். ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
ரயில் ஏறிய போது போலீசார் கைது:
அவனது ஆடை வகையறாக்களை, தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துச் சென்றார் ‘இன்பார்மர்’. கொள்ளையன் சிக்கிய மகிழ்ச்சியில், ரயில் ஏறச் சென்றனர் போலீசார். அப்போது அங்கு வந்த பராக்கார் இன்ஸ்பெக்டர், ‘இன்பார்மர்’ மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும் கொலை வழக்கில் தமிழகப் போலீசாரைக் கைது செய்வதாகவும் கூறி அழைத்துச் சென்றார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன செய்வதெனத் தெரியாமல், திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக, தமிழக உள்துறைச் செயலாளர் ராஜகோபால் மூலம், மேற்கு வங்க அரசைத் தொடர்பு கொண்டனர். அங்கிருந்து உருப்படியான பதில் எதுவும் கிடைக்காததால், கப்பல் போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் வாசனிடம் பேச, அவர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேசினார். ‘இன்பார்மர்’ இறந்தது பற்றி, உள்ளூரில் கடும் நெருக்கடி இருந்ததால், மம்தாவாலும் பெரியளவில் உதவி செய்ய முடியவில்லை. எல்லாம் சட்டப்படி தான் நடக்கும் எனக் கூறிவிட்டனர்.
பின் ஒரு வழியாக, இந்திய தண்டனைச் சட்டம் 304 – கொலை நோக்கமின்றி தாக்கி, மரணத்துக்கு காரணமாதல், என்ற பிரிவில் பதிவு செய்வதாக இருந்த வழக்கை, 304ஏ – கவனக்குறைவால் மரணத்துக்கு காரணமாதல், என்ற பிரிவில், பதிந்தனர். 304க்கு அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள். 304ஏக்கு இரண்டு ஆண்டுகள். நேற்றே போலீசாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பிணையில் விடுவித்தனர்.
“தலை தப்பியது மம்தா புண்ணியம்” என ஆறுதல் அடைந்த தமிழக போலீசார், கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை திரும்பினர், கைது செய்யப்பட்ட கொள்ளையனோடு!
-Dinamalar