பிரபாகரனின் 12 வயது மகன் இலங்கை இராணுவத்தால் படுகொலை: சானல் 4

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடைசி மகன் பாலச்சந்திரன் (வயது 12) இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சானல் 4 ஊடகம் வெளியிடவுள்ள போர்க்குற்ற காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின்போது பிரபாகரன் அவர்களின் மகன் 5 விடுதலைப் புலி போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் அவர்கள் அனைவரும் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சரணடைந்த இவர்களை படுகொலை செய்வதற்கான உத்தரவை இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே ஊடாக அப்போதைய இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மற்றும் களத்தில் நின்ற படைத் தளபதிகளுக்கு பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கொலைகளம் காணொளியின் பாகம் 2-ஐ பிரிட்டிஷ் ஊடகமான சானல் 4, நாளை ஒளிபரப்பவுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த காணொளியை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அக்காணொளியில் புலிகளின் தலைவர் பிரபகாரன் அவர்களின் இறுதித் தருணம் குறித்த சில சர்ச்சையான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக ”இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” என்ற அக் காணொளி தயாரிப்பாளரான கலும் மக்ரே கூறியுள்ளார்.

TAGS: