இலங்கையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக குற்றச்சாட்டு

இலங்கை குடியரசுத் தலைவரால் பொறுப்பமர்த்தப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் “குடிமக்கள் உரிமைகள் இயக்கம்” என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது.

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக பிரச்னைகளில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வரும் இந்த அமைப்பு, நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதுக்குமே பொருந்துவதாகக் கூறுகிறது.

இலங்கையில் சட்ட ஒழுங்கு நிலை குலைந்துவருவதாக கூறும் இந்த அமைப்பு, சட்டவிரோதக் கும்பல்களும் ஆயுதக் குழுக்களும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இயங்கிவருவது இப்போது சாதாரணமாக் காணக்கூடிய விஷயமாகிவிட்டது என்று அந்த அமைப்பு கூறுகிறது.

வடக்கு கிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை அங்கு பெரிய அளவில் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளன, அங்கு ஆயுதக்குழுக்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன, சிவில் நிர்வாகமும் காவல்துறையும் சுதந்திரமாச் செயல்படவில்லை என்பது நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறும் அந்த அமைப்பு, இலங்கையின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக அது கூறுகிறது.

இலங்கை இதே நிலையில் செல்ல அனுமதிப்பது முட்டாள்தனமானது என்று கூறும் இந்த அமைப்பு, இராணுவம் சிவில் துறைகளில் ஈடுபடுவதை விரைவாக நிறுத்த வேண்டும், சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் கலைக்கப்பட்டு அவைகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும், பொது நிர்வாகத்தையும் காவல்துறையையும் கண்காணிக்க சுதந்திரமான ஆணையங்கள் நிறுவப்படவேண்டும், மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் அதிகாரப்பகிர்வு செய்யப்படவேண்டும், தகவலறியும் உரிமை தரப்படவேண்டும் என்று கூறுகிறது.

இந்த அமைப்பின் அறிக்கையில், காமினி வியன்கொட, ஜயதிலக கம்மல்லவீர, சந்திரகுப்த தேனுவர, கே.டபிள்யூ, ஜனரஞ்சன, சுதர்ஷன குணவர்தன மற்றும் குசால் பெரெரா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

TAGS: