இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஜெனீவா களத்தில் தருஸ்மன்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்கு ஐ.நா. நிபுணர்கள் குழுவின் தலைவர் தருஸ்மன் ஆசிய நாடுகளிடையே இராஜதந்திர பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் எனத் தெரியவருகின்றது.

மர்சுகி தருஸ்மனின் இந்த அதிரடியான நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்துள்ள ஆசிய நாடுகள், தமது முடிவை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை விவகாரம் குறித்த தீர்மானம் வரும் 22-ம் அல்லது 23-ம் தேதி வாக்கெடுப்புக்கு விடப்படும் இந்நிலையில், தருஸ்மன் முன்னெடுத்துள்ள இந்த இராஜதந்திர நடவடிக்கையானது ஜெனீவாவிலுள்ள இலங்கை அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது.

ஜெனீவா விரைந்த கையோடு பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுகளை முன்னெடுத்த தருஸ்மன், இலங்கைக்கு எதிரான தீர்மானம், இலங்கை இறுதி போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் உட்பட முக்கியமான விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வு செய்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தருஸ்மன் தலைமையிலான மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமித்து அறிக்கை பெற்றமை தெரிந்ததே.