தமிழர்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது : ராஜபக்சே

இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடொன்றை உருவாக்குவதே இலங்கையின் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என ராஜபக்சே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறுபதாம் ஆண்டு விழா இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த சில தரப்பினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. ஒரே நாடு என்ற கொள்கைக்காக அரசாங்கம் எதனையும் விட்டுக்கொடுக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.