ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்தின் மீதான விவாதாமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இருதரப்பிலும் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஆஸ்திரேலிய செனெட் மன்றத்தில் இது தொடர்பிலான ஒரு தீர்மானம் நேற்று நிறைவேறியுள்ளது.
இலங்கையில் போருக்கு பின்னர் குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மனித உரிமை மீறல்கள் விஷயம் குறித்து முழுமையாக கவனிக்கத் தவறியது என்றும், எனவே ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தையாவது ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஆதரிக்க வேண்டும் என்று செனட் மன்றம் கோருகிறது என்று, அங்குள்ள பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியனன் கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனவும் ஆஸ்திரேலியா கூறுகிறது.