சிரியாவில் உடனடி சண்டை நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தனது ஆறு அம்ச பரிந்துரைகளுக்கு, அந்நாட்டு குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத் ஒப்புதல் அளித்துள்ளதாக, ஐ.நா.-அரபு லீக் சிறப்பு பிரதிநிதி கோபி அன்னான் தெரிவித்துள்ளார். அவரது இத்திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளன.
எகிப்து புரட்சியைத் தொடர்ந்து சிரியாவில், அந்நாட்டு குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது குடியரசுத் தலைவர் இராணுவத்தை ஏவத் துவங்கியதால், ஆர்ப்பாட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்தப் போராட்டம், இன்று வரை தொடர்கிறது. இதற்கிடையில், சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா.,வும், அரபு லீகும் தங்கள் சிறப்பு பிரதிநிதியாக, ஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னானை நியமித்து, சிரியாவுக்கு அனுப்பின. ஆனால், அப்போதைய நிலையில் குடியரசுத் தலைவர் அவரது திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அன்னானின் பயணம் தோல்வியில் முடிந்தது. எனினும், இதுகுறித்து பேச்சு நடத்த ஐவர் குழுவை, அன்னான் சிரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதில் ஓரளவு பலன் கிட்டியது.
இந்நிலையில், இரு நாட்கள் பயணமாக நேற்று, சீனத் தலைநகர் சென்றார் கோபி அன்னான். அங்கு, பிரதமர் வென் ஜியாபோவுடன் இதுகுறித்துப் பேசினார். அதேநேரம், கோபி அன்னானின் திட்டத்தை சிரிய அதிபர் ஒப்புக் கொண்டதாக, நேற்று, அன்னானின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.
சிரியாவில் அன்னிய நாடுகளின் தலையீடு கூடாது என, இதுவரை மறுத்து வந்த ரஷ்யாவும், சீனாவும், கோபி அன்னானின் பரிந்துரைகளுக்கு ஆதரவு அளித்துள்ளன.இதுகுறித்து நேற்று பேட்டியளித்த சீன தலைமையமைச்சர் வென் ஜியாபோ, “சிரியா விவகாரம் விரைவில், அமைதியான முறையில் பொருத்தமான வழியில் தீர்வை எட்டும் என நம்புகிறேன்” என்றார்.
கோபி அன்னானின் ஆறு அம்ச பரிந்துரைகளை, ஐ.நா., பாதுகாப்பு மன்றத்திலும் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபி அன்னானின் ஆறு அம்ச திட்டம்
* சிரிய நாட்டவர் தலைமையின் மூலம் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பது.
* தெருக்களில் இருந்து ராணுவத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பகுதிகளில், மனிதாபிமான உதவிகளுக்கு வழிவிடுதல்.
* வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல்.
* பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தடையின்மை.
* அமைதியான, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதியளித்தல்.