இலண்டன் கலவரம் : காவல்துறையினரால் 1300 பேர் கைது

இலண்டனில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் இலண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியைச் சேர்ந்த மார்க் டக்கன் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது காவல்துறையினருக்கும், டக்கன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டதோடு அங்கிருந்த பொருட்களும் கலவரக்காரர்களினால் சூறையாடப்பட்டன.

இந்த கலவரம் இலண்டனுக்கு அண்மித்த மேலும் சில நகரங்களுக்கும் பரவியது. இதனையடுத்து தலைமையமைச்சர் டேவிட் கேமரூன் இத்தாலி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இலண்டன் திரும்பினார்.

கலவரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டம் நேற்று கூடியபோது “எந்த விலை கொடுத்தாலும் கலவரத்தை ஒடுக்குவோம்” என்று  தலைமையமைச்சர் அக்கூட்டத்தில் சூளுரைத்தார்.

கலவரப்பகுதிகளில் பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு உதவ ஸ்காட்லாந்து காவல்துறையினர் 250 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 300 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை உடனடியாக சிறையில் அடைக்கும் பொருட்டு இலண்டன் நீதிமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் இயங்கியது.

கடந்த நான்கு நாள் கலவரத்தில் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இழப்பீடு காப்பீடு நிறுவனங்கள் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.