நிருபர்களின் கை கால்களை உடைப்பேன் என திமிராக பேசிய இலங்கை அமைச்சரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு குடியரசுத் தலைவர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு அந்நாட்டு அமைச்சர்கள் அடாவடி பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் மேர்வின் சில்வா என்பவர் வெளிநாடுகளில் வாழும் இலங்கை நிருபர்கள் பற்றி திமிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இலங்கைக்கு எதிரான கருத்துக்களை பேட்டி அளித்து காட்டிக் கொடுக்கும் அவர்கள் நாடு திரும்பும் போது அவர்களின் கை கால்களை உடைப்பேன் என்றார்.
மேலும், குடியரசுத் தலைவராக மகிந்தா ராஜபக்சே ஆட்சியில் இருக்கும் வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சண்டியர் போன்று வீராப்பாக பேசினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து அமைச்சர் மேர்வின் தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராஜபக்சே கேட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தும் படி இலங்கையின் ஆளும்கட்சியாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரி பால சிறிசேனாவுக்கு உத்தர விட்டுள்ளார். மேர்வின் சில்வாவின் பேச்சு தனக்கு விளங்கவில்லை. எனவே, மைத்திரி பாலசிறிசேனா விசாரித்து தன்னிடம் விளக்கமாக கூறும்படி அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.