தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் விசேட ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலி பேராளிகள் இலங்கைக்குள் மீனவர்கள் என்ற போர்வையில் ஊடுருவியிருப்பதாகவும், இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதுங்கியிருப்பதாகவும், இலங்கையை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், இலங்கையின் ஆங்கில நாளேடான ‘ஐலண்ட்’ வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று கூறுகிறது.
இலங்கையின் உளவுத்துறையை மேற்கோள் காட்டும் இந்த பத்திரிகைச் செய்தி, தற்போது நடந்து கொண்டிருக்கும் நல்லிணக்க வழிமுறையைக் குலைப்பதே இவர்களின் நோக்கம் என்றும், அண்மையில் இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் வெட்டிக்கொல்லப்பட்ட இலங்கை இராணுவத் துணைக்குழு உறுப்பினர் கொலையின் பின்னணியில் இருந்த மூன்று பேர் விடுதலைப் புலிப் போராளிகள் என்றும் கூறுகிறது.
போர் முடிந்த போது தமிழகத்துக்கு தப்பியோடியதாக இந்தப் போராளிகள் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும், அங்கே ரகசிய முகாம்களில் தங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாக இந்த செய்தி கூறுகிறது.
திருகோணமலை சம்பவத்தைத் தவிர, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் நடந்த பல கொலைகளுடனும் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று இந்தச் செய்திகள் கூறுகின்றன.
ஆனால், இலங்கையிலிருந்து வெளிவரும் மற்றொரு நாளேடான, ‘டெய்லி மிரர்’ திருகோணமலை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள்தானா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக மட்டும் கூறுகிறது.