ஆணைக்குழு பரிந்துரை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் கருத்து

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக இலங்கை அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை செவ்வாய் கிழமையன்று ரணில் விக்ரமசிங்க சந்தித்து இலங்கைப் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பிறகு, இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகள் உள்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக எஸ்.எம். கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.

“அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, எல்எல்ஆர்சி அறிக்கையின் அடிப்படையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு. அதுதொடர்பாக, அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டும்”, என்றார் ரணில் விக்ரமசிங்க.

TAGS: