தமிழர்கள் பிரச்னை, பெருபான்மை சிங்கள மக்களுக்கு தெரியாது : சந்திரிக்கா

தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகள் தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாப நோக்கங்களுக்காக இனப்பிரச்னையை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லாமையே பிரச்னைகளுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு போதியளவு சேவைகளை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாகவும், ஏன் அவர்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் அமைதியானவர்கள், அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: