“இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஓடியவர்களைத் தவிர, மற்றவர்களில் 95 சதவீதத்தினர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டனர்’ என, இலங்கை சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே கூறினார்.
இலங்கையில் கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த இறுதிகட்டப் போரில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, இந்திய அரசின் நிதியுதவியுடன் பல்வேறு மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழுவினர், நேற்று முன்தினம் இலங்கை சென்றனர்.
அமைச்சர்களுடன் சந்திப்பு: ஆறு நாள் பயணமாக இலங்கை சென்ற அவர்கள், நேற்று கொழும்பில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், பொருளாதார மேம்பாட்டுத் துணை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் போது, பாசில் ராஜபக்ஷேயிடம் எம்.பி.,க்கள் குழுவினர், “இலங்கையின் இறையாண்மையை இந்தியா எப்போதுமே மதிக்கிறது, இரு நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான உறவுமுறைகளை பலப்படுத்தவே இந்தியா விரும்புகிறது” எனத் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த பாசில் ராஜபக்ஷே, இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவரித்தார்.

























