எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். இதனால் அவரது 32 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. முபாரக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில், இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று திரண்டனர். இராணுவ ஆட்சிக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், ஆட்சிப் பொறுப்பை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். எகிப்தின் இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியினரும், இளைஞர் விடுதலை இயக்கத்தினரும் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

எகிப்தில் கடந்த வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சி 70 சதவீத தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் அக்கட்சியினர் இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டுமென இஸ்லாமிய கட்சி கடந்த வாரம் இராணுவ ஆட்சியாளர்களை கேட்டுக் கொண்டது. ஆனால் அவர்களது கோரிக்கையை இராணுவம் நிராகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி இஸ்லாமிய கட்சியின் குடியரசு வேட்பாளரை, இராணுவம் தகுதி நீக்கம் செய்துள்ளது.