தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் வாபஸ் பெற ராஜபக்சே மறுப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் அண்மையில் இலங்கை சென்றனர். அங்கு 6 நாட்கள் தங்கி சுற்று பயணம் மேற்கொண்டனர்.

இறுதி கட்டப் போரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு நேரில் சென்றனர். முள்வேலி முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களையும், சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டிருப்பர்களையும் நேரில் சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தனர்.

அப்போது, தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என தமிழர்கள் புகார் செய்தனர். மேலும், தங்கள் பகுதியில் முகாமிட்டிருக்கும் இலங்கை இராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதை தொடர்ந்து அந்நாட்டு குடியரசுத் தலைவர் ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அப்போது தமிழ் மக்களின் வேண்டுகோளை ஏற்று தமிழர் பகுதிகளில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என இந்திய எம்.பி.க்கள் குழு சார்பில் வலியுறுத்தினார்.

அந்த கோரிக்கையை ஏற்க ராஜபக்சே மறுத்து விட்டார். அங்கிருந்து இராணுவத்தை வாபஸ் பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்த தகவலை இலங்கை குடியரசுத் தலைவரின் செய்தி தொடர்பாளர் பண்டலா ஐசேகரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது இலங்கை வந்த இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் தமிழர் பகுதியில் உள்ள இராணுவத்தை வாபஸ் பெறமுடியாது என ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என கூறினார்.

TAGS: