ஹோ ஹப் அலுவலகத்தில் எம்ஏசிசி

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் அதிகாரிகள், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் வீட்டில் புதுப்பிக்கும் வேலைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஹோ ஹப் கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.

நேற்று மாலை இச்செய்தியை வெளியிட்டிருந்த பிரபல அரசியல் வலைப்பதிவான மலேசியா டுடே, அதை ஒரு “அதிரடிச் சோதனை”என வருணித்திருந்தது.

இதன் தொடர்பில் ஹோ ஹப் நிறுவன அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, தம் அடையாளத்தைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், எம்ஏசிசி அதிகாரிகள் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர் என்றார். 

“சோதனையெல்லாம் செய்யவில்லை. எங்கள் எஜமானரைச் சந்திக்க வந்திருந்தார்கள். அப்போது அவர் இல்லை என்பதால் அவர் வரும்வரை 10 நிமிடம் காத்திருந்தார்கள்.

“அவர் வந்ததுடன் சிறிது நேரம் பேசினார்கள். பின்னர் சென்று விட்டனர்.” எம்ஏசிசி அதிகாரிகள் 30 நிமிடத்துக்கும் குறைவான நேரமே அங்கிருந்தனர் என்றாரவர். 

ஆவணங்கள் எதையும் எடுத்துச் சென்றாரா என்று வினவியதற்கு இல்லை என்றார். அவர்களின் வருகையின் நோக்கம் தமக்குத் தெரியாது என்றவர் சொன்னார்.

எம்ஏசிசி விசாரணை இயக்குனர் முஸ்டபார் அலியையும் தலைமை ஆணையர் அபு காசிம் முகம்மட்டையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதில் பயனில்லை. அவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் பதில் இல்லை.

ஹோ ஹப் நிறுவனத்துக்கும் சட்டத்துறைத் தலைவருக்குள்ள தொடர்பை விவரித்த மலேசியா டுடே,  ஏஜி, அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வின்செண்ட் லைக்கு அவரின் எதிரியான லோ டக் சோயைக் கவிழ்க்க உதவினார் என்று கூறியிருந்தது.

இதற்குக் கைமாறாக, சிரம்பானில் உள்ள அப்துல் கனியின் பங்களாவில் ரிம18,000 பெறுமதியுள்ள புதுப்பிக்கும் வேலைகள் செய்துகொடுக்கப்பட்டன. அதனுடன் தொடர்புகொண்ட பொருள் விளக்கப்பட்டியல், காசோலைகள் முதலியவற்றையும் அது வெளியிட்டிருந்தது.

அப்துல் கனி அதை மறுத்துள்ளார். சிரம்பானில் தமக்குச் சொத்து எதுவும் இல்லை என்றாரவர்.

இதனிடையே, மலேசியாகினியிடம் பேசிய சமூக ஆர்வலரும் முன்னாள் எம்ஏசிசி ஆலோசகருமான ரோபர்ட் பாங், விசாரணை முடியும்வரை அப்துல் கனி விடுப்பில் செல்ல வேண்டும் என்றார்.

“நான் அதைத்தான் செய்தேன். ஒரு வலைப்பதிவில் நான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டபோது நான் எம்ஏசிசி ஆலோசனை வாரியத்திலிருந்து விலகினேன்.

“அதில் இருப்பது விசாரணைக்கு இடையூறாக இருக்கலாம்  என்பதால் விலகினேன். அப்துல் கனியும் அதையே செய்து ஏஜி அலுவலகத்தின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். மறுப்பதால் மட்டுமே அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டவர் ஆகிவிடமாட்டார்”, என்றாரவர்.

TAGS: