அல்தான்துயா கொலை – யாரின் குற்றம், யாருக்குத் தண்டனை!

இராகவன் கருப்பையா – சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சிலாங்கர், ஷா ஆலாம் பகுதியில் மொங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

அக்கொலையை புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட இரு கொலையாளிகளுடன்  சேர்த்து தற்போது ஒட்டு மொத்த மலேசியர்களும் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது.

அல்தான்துயாவை கொலை செய்ததாக அஸிலா ஹட்ரி மற்றும் சிருல் அஸ்ஹார் ஆகிய இரு காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்ட வேளையில், அதற்கு உடந்தையாக இருந்தார் என்று கூறப்பட்ட அப்துல் ரஸாக் விடுதலை செய்யப்பட்டார்.

அஸிலா காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிருல் ஆஸ்திரேலியாவிற்கு தப்பி ஓடிவிட்டார் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

தனது மகளின் கொடூரமான இறப்புக்கு  100 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோரி அல்தான்துயாவின் தந்தை ஷாரிபு,  மலேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும் அப்துல் ரஸாக் மீதும் வழக்குத் தொடுத்திருந்தார்.

அண்மையில் வழக்கை செவிமெடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி சுமதி, அப்துல் ரஸாக்கும் மலேசிய அரசாங்கமும் ஷாரிபுவிற்கு தலா 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

சம்பவம் நிகழ்ந்த வேளையில் கொலையாளிகள் இருவரும் அரசாங்க ஊழியர்களாக இருந்ததால் அந்த 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகைக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது நியதி.

அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் மே மாதத்தில் அதற்கான தீர்ப்பு வழங்கப்படும். அரசாங்கம் அதில் தோல்வியுற்றால் ஷாரிபு அத்தொகையை பெறுவது உறுதியாகிவிடும்.

அப்படியென்றால் அவ்விரு கொலையாளிகளின் சார்பாக பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து  4.7 மில்லியன் ரிங்கிட் ஷாரிபுவிற்கு வழங்கப்படவுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களில் இதுதான் நடக்கிறது. எனினும் அவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தடுப்புக் காவல் நிலையங்களில் அல்லது சிறைச்சாலைகளில் நிகழும் சில கொடூர மரணங்கள் தொடர்பான வழக்குகள் கூட இது போன்ற சூழ்நிலைகளில்தான் நிறைவு பெறுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கும் பட்சத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அக்கொலைகளை புரிந்த அரசு அதிகாரிகள் சார்பாக அரசாங்கம்தான் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியிருக்கிறது.

குற்றம் புரிந்த அரசாங்க அதிகாரிகள் பல வேளைகளில் உல்லாசமாக வெளியே நடமாடுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் ஏற்படுவது இல்லை.

ஆக, இவையெல்லாமே சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ஒன்றுதான் எனும் போதிலும், மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் விரயமாகிறது என்று நினைத்துப் பார்க்கும் போது நமக்கு சற்று வேடிக்கையாகவே உள்ளது.