ஈராண்டுக்குள் இலங்கை இரண்டாகும்: ஐ.நா. மன்றம் இதை அரங்கேற்றும்!

ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் இலங்கை அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இலங்கை இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும் என்றும், ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று இலங்கை எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நவசிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா இது தொடர்பாகத் தெரிவித்ததாவது;

“ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும், அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்கக் கோரியும் நாம் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம். கொழும்பில் மாத்திரம் குவிந்து கிடக்கும் அதிகாரம், மாநில மட்டத்தில் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; அத்துடன் வடக்கு, கிழக்கிற்குத் தேவையான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

ஜெனிவாத் தீர்மானத்திற்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்த முடியாவிட்டால், இலங்கை அரசு அந்தப் பணியை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

அரசியல் தீர்வை வழங்கினால் விமல் வீரவன்ஸ மற்றும் குணதாஸ அமரசேகர ஆகியோர் தன்னை ஆட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று மகிந்தா ராஜபக்சே அஞ்சுகிறார்.  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெனிவாவில் அடித்துக்கூறிவிட்டு மீண்டும் அனைத்துலகத்தையும், நாட்டு மக்களையும் ராஜபக்சே ஏமாற்றிக்கொண்டிக்கின்றார்” என்றார்.

ருஹணு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அருண சொய்சா கூறியவை வருமாறு:

“ஆட்சியில் இருக்கும் குடியரசுத் தலைவர் மஹிந்தா ராஜபக்சேவின் செயற்பாட்டைப் பார்க்கும்போது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த நாடு இரண்டாகப் பிரியும் அபாயம் உள்ளது. அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று அனைத்துலகத்திடம் கூறிவிட்டு அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை அப்படியே கிடப்பில் போடும் செயலில்தான் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.”

“ஜெனிவாத் தீர்மானத்தை தொடர்ந்து அனைத்துலக அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் அனைத்துலகம் எமது நாட்டுக்குள் ஐ.நா. அமைதிப்படையை அனுப்பி வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை அறிவதற்கான பொது வாக்கெடுப்பை நடத்தலாம். அப்போது அந்த மக்கள் தமிழர்களின் தாயகமான வட கிழக்கு மாநிலங்களை தனியாக பிரித்துத் தருமாறு கூறுவர். இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் இலங்கை அரசு அரசியல் தீர்வை வழங்கவேண்டும்” என்றார்.

TAGS: