போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய இராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார்.
வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அண்மையில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது.
இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய இராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
வடகொரிய இராணுவம் உருவாக்கப்பட்டு 80-ம் ஆண்டு விழா, பியாங்யாங்கில் நடந்தது. இதில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். அவர் முன்னிலையில் துணை மார்ஷல் ரியாங் ஹோ கூறுகையில், அமெரிக்கா, தென் கொரியாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுகிறது.
இதை சமாளிக்க வடகொரிய ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டிய முக்கியம். இதை உணர்ந்து வடகொரிய புதிய தலைவர் கிம் ஜாங், இராணுவத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். அணுஆயுதம், ஏவுகணை பலம் நிறைந்த நாடாக வடகொரியா உள்ளது. நவீன ஆயுதங்களை கையாள்வதில் எங்கள் மக்கள் திறமையானவர்கள். ஒரே ஒரு தாக்குதலில் அமெரிக்காவை தோற்கடிக்கும் பலம் எங்களிடம் உள்ளது என்றார்.