லைபீரிய மாஜி அதிபர் போர் குற்றம் இழைத்ததாக சர்வதேச கோர்ட் தீர்ப்பு

லைபீரியாவில், 10 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட உள்நாட்டு சண்டையின் போது, முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லர், போர்க் குற்றம் இழைத்ததாக, அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆப்ரிக்க நாடான லைபீரியாவில், கடந்த 1991-ம் ஆண்டு முதல், 2002-ம் ஆண்டு வரை, உள்நாட்டுச் சண்டை நடந்தது. அப்போதைய அதிபர் சார்லஸ் டெய்லர், 10 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்களைக் கொன்று குவித்ததாக, அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு செலவுக்கு, அமெரிக்கா நிதியுதவி அளித்தது.கடந்த 91ம் ஆண்டு முதல், 2002ம் ஆண்டு வரை சியாரா லோனில் நடந்த உள்நாட்டுக் கலவரத்துக்கு துணையாக இருந்ததாகவும், வைரங்களை விற்று ஆயுதங்கள் வாங்க, சார்லஸ் டெய்லர், உதவி செய்ததாகவும், அனைத்துலுக நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லர், போர்க் குற்றம் இழைத்துள்ளதாக, நீதிபதி ரிச்சர்ட் லூசிக் தலைமையிலான அனைத்துலக நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில், அவருக்கு எந்த விதமான தண்டனை என்பது குறித்து, அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ள விசாரணையின் போது அறிவிக்கப்பட உள்ளது.