சூடான் எல்லையில் அவசரநிலை அறிவிப்பு

தெற்கு சூடான் எல்லையில் உள்ள பகுதிகளில், சூடான் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 இலட்சம் பேர் பலியாயினர். ஐ.நா., தலையீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தினர் தற்போது தெற்கு சூடானை ஆட்சி செய்து வருகின்றனர்.

இதனிடையே, இரு நாட்டு எல்லையில் உள்ள ஹெக்லிக் என்ற இடத்தில், எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. இதை தங்களிடம் ஒப்படைக்கும்படி சூடான் அரசு, தெற்கு சூடானை எச்சரித்து வந்தது. இதற்கு தெற்கு சூடான் மறுப்பு தெரிவித்ததால், இரு நாடுகளுக்கிடையே அண்ரைமயில் சண்டை நடந்தது. இந்த சண்டையில், இருதரப்பிலும் 22 வீரர்கள் பலியாயினர்.

“ஹெக்லிக் பகுதியிலிருந்து, தெற்கு சூடான் தனது படையை வாபஸ் பெறவில்லையென்றால், அந்நாட்டுடன் போர் நடக்கும்” என, சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் தெரிவித்திருந்தார். “சண்டை நடந்தால், தெற்கு சூடானுக்கு ஆதரவளிப்போம்” என, உகாண்டா தெரிவித்திருந்தது.

நிலைமை விபரீதமாக போவதை கண்ட ஐ.நா., பொதுச் செயலர் பான் -கி- மூன், சர்ச்சைக்குரிய ஹெக்லிக் பகுதியிலிருந்து, தெற்கு சூடான் தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய படைகளை வாபஸ் பெறுவதாக, தெற்கு சூடான் தலைவர் சால்வா கிர் அறிவித்தார். இருப்பினும், சூடான் படையினர் தொடர்ந்து குண்டு வீசி வருவதாக, தெற்கு சூடான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தெற்கு சூடானையொட்டிய கார்டோபன், வொயிட் நைல், செனார் ஆகிய பகுதிகளில் சூடான் தலைவர் அல் பஷீர் , அவசர நிலையை அறிவித்துள்ளார். இதன் மூலம் தெற்கு சூடானுடனான வர்த்தகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையால், போர் தொடரக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது.