பான் கீ மூனின் பேச்சால் கடுப்பாகியுள்ள இலங்கை!

இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள் நேர்காணல் இலங்கை அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகவும் பான் கீ மூன் இந்திய ஊடகம் ஒன்று வழங்கிய நேர்காணலின் போது கூறியிருந்தார்.

அத்துடன் போருக்குப் பின்னர் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். பான் கீ மூனின் இந்தக் கருத்து இலங்கை அரசாங்கத்துக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரின் இந்தக் கருத்து நியாயமற்றது என்றும், இதனை விடுதலைப் புலிகள் தமக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்று இலங்கை அரசாங்கம் கருதுவதாக கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, பான் கீ மூனின் பொருத்தமற்ற இக் கருத்துகள் தொடர்பாக, ஐ.நாவிடம் கேள்வி எழுப்புமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் துணைத் தூதுரிடம் நேற்று உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன.

TAGS: