பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றவர்களை கலைப்பதற்கு போலீசார் எடுத்துக்கொண்ட “முரட்டுத்தனமான மற்றும் தன்மூப்பான முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை அல்ல”, என்று சுஹாகம் என்ற மனித உரிமை ஆணையம் கூறியது.
“பேரணியில் பங்கேற்றவர்கள் மற்றும் ஊடகத்தினர் ஆகியோருக்கு எதிராக அளவுக்கு மீறிய மற்றும் தேவையற்ற பலாத்காரத்தை போலீசார் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்த அல்ல, அவர்களின் கடமை சட்டத்தையும் ஒழுங்கையும் பொதுப் பாதுகாப்பையும் தொழிலியல் முறைப்படி நிலைநிறுத்துவதாகும்”, என்று மலேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஹஸ்மி அகம் கூறினார்.
பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களைக் கலைப்பதற்கு போலீசார் “தேவையான மற்றும் வன்முறையற்ற முறைமையைப் பயன்படுத்துவது தேவை என்று கூறிய அவர், பலாத்காரம் மற்றும் சுடும் ஆயுதங்கள் பயன்படுத்துவது சம்பந்தமாக ஐநாவின் அடிப்படை கோட்பாடுகளை அதிகாரத்தினருக்கு அவர் நினைவூட்டினார்.
“சட்ட அமலாக்க அதிகாரிகள், இயன்றவரையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, வன்முறையற்ற வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று (அக்கோட்பாடு) கூறுகின்றது.”
“அமைதியாகக் கூடுவதற்கான மக்களின் உரிமையை உபயோகிக்க அவர்களுக்கு உதவுவது” போலீசாரின் பங்கு என்று அவர் மேலும் கூறினார்.
“ஜோர்ஜ்டவுன், குவாந்தான், ஜொகூர் பாரு, ஈப்போ, கூச்சிங், கோட்டகின்னபாலு போன்ற இடங்களில் இது போன்ற பேரணிகளில் பங்கேற்றவர்கள் கூடி அமைதியாக, முறையாக, பொறுப்பான முறையில் எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் கலைந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது இவ்வாறான நடவடிக்கைகள் சாத்தியமானவை என்பதற்கு சான்றாகும்.”
போலீசாருக்கும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கும் இடையில் நடுவராக செயல்படுவதற்கு சுஹாகாம் முன்வைத்த ஆலோசனையை அரசாங்கம் நிராகரித்து விட்டது குறித்து ஹஸ்மி ஏமாற்றம் தெரிவித்தார்.
பேரணியின்போது நடந்த மனித உரிமைகள் மீறல்கள் மீது விசாரணை நடத்துவதற்கு சாட்சிகளை ஆணையம் அழைக்கிறது என்று அவர் கூறியதுடன், அம்மீறல்கள் சம்பந்தமான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை வழங்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் 28 இல், பேரணியில் பங்கேற்றவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்ட சிறிது நேரத்திற்குப் பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போலீசாரின் முரட்டுத்தனமான நடத்தை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பெர்சே ஏற்பாட்டாளர்கள் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
போலீசாரும் அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளனர்.

























