நாளைய தலைவர்களை உருவாக்குவதில் இன்றைய தலைவர்கள் பாடுபட வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் வலியுறுத்தினார்.
கனடியத் தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட சிறுவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
கனடியத் தமிழ்க் காங்கிரஸ் என அழைக்கப்படும் கனடியத் தமிழர் பேரவையின் இத்திட்டத்தில் 70க்கு மேற்பட்ட சிறார்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் ஒன்றோரியோவின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் உயர்திரு. பிராட் டுகுய்ட் , ஸ்கார்போரோ ரூஜ் ரிவர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன், ரொறொண்ரோ கல்வி அறக்கட்டளையின் பொறுப்பாட்சியர் ஷோன் சென் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று கனடியத் தமிழர் பேரவையில் தொடங்கப்பட்ட இப்புதிய திட்டத்தினால் தன்னால் பிறரின் முன்னால் பேசுவதற்கு நிலவி வந்த அச்சம் முழுவதுவதுமாக களையப்பட்டு தனது மனதில் நம்பிக்கை மனதில் விதைக்கப்பட்டுள்ளதாக இத் திட்டத்தில் பங்கெடுத்த நிலன் ரத்தினம் என்ற 15 வயதாகும் சிறுவன் தெரிவித்தான்.
20 உறுப்பினர்களைக் கொண்டு கடந்த சனிக்கிழமை உருவாக்கப்பட்ட இத் திட்டத்திற்கு சுறுசுறுப்பான, ஊக்கமுள்ள சிறுவர் கூட்டம், பெற்றோர்கள், அரசியல்வாதிகள், சமுதாயத்தின் பொது நல அக்கறையுள்ளோர் அனைவரும் ஊக்கமூட்டி பாராட்டியுள்ளனர். வாழ்க்கைப் பணித் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பும் எதிர்காலத் தலைவர்களுக்கு முதல் அடியை எடுத்து வைப்பதற்கு இத்திட்டம் நிச்சயம் உதவிகரமான ஒன்றாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.